Tuesday, 29 May 2012

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012

கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 2012-ஆம் ஆண்டிற்கான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான யூத் எம்.சி என அழைக்கப்படும் இளம் பட்டதாரிகளின் இயக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவினை எற்று நடத்தி வருகின்றனர்.

பினாங்கிலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 20 தமிழ்ப்பள்ளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர். இதனை தவிர்த்து பள்ளி மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி ஆகியனவும் நடத்தப்பெற்றன. இந்நிகழ்வின் நீதிபதிகளாக பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், முதுகலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக யூத் எம்.சி இயக்கத்தின் தலைவர் திரு.எட்வின் ஆனந்த் ராஜ் கூறினார். மேலும், எதிர்காலங்களில் இந்நிகழ்விற்கு வலு சேர்க்க பல அரசு சாரா அமைப்புகள் உதவி புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பள்ளியில் மாணவர்கள் கற்கும் அறிவியலுக்கும் அறிவியல் விழாவிற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாயும், ஒர் அறிவியல் நுணுக்கத்தினை பரிசோதனைகளின்வழி தெரிந்துகொண்டு அதனை விளக்குவதுதான் சிறந்த அறிவியல் உத்தியாகும் என திட்ட ஆலோசகர் திரு.முகமது யூனூஸ் கூறினார். இவ்வறிவியல் விழாவின் வழி பல எதிர்கால விஞ்ஞானிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், இது தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் விடயம் எனவும் அவர் மேலும் கூறினார்.

பள்ளி பாட நேரத்தைத் தவிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் அறிவியல் பரிசோதனையை பல வாரங்களாக மேற்கொண்டு வெற்றிப் பெறச் செய்ததாகவும், மாணவர்களின் ஈடுபாட்டினைக் கண்டு தாம் மெச்சுவதாகவும் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள திரான்சு கிரியான் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மோகனசுந்தரி கூறினார். பிறை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.குமார் கூறுகையில், பிறை தமிழ்ப்பள்ளி மூன்று ஆண்டுகளாக அறிவியல் விழாவில் பங்கெடுத்து வருவதாகவும், இம்முறை தன் மகனும் இப்போட்டியில் பங்கெடுத்திருப்பது தமக்கு மகிழ்வை அளிப்பதாகவும் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பினையும், அவர்களின் படைப்புத் திறனையும் கண்டு தாம் அதிசயிப்பதாக போட்டியின் நீதிபதிகளில் ஒருவரான பௌதிகவியலில் முதுகலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் குமாரி அனிதாம்பிகை பெருமாள் கூறினார். தாம் இந்நிகழ்வில் நீதிபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை எனவும் அவர் கூறினார். காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் ஆசியர்களும் மாணவர்களும் தத்தம் கூடாரங்களை அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டனர். காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீதிபதிகள் ஒவ்வொரு கூடாரமாகச் சென்று மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். மதிய உணவிற்குப் பின்பு துவாங்கு சேட் புத்ரா மண்டபத்தில் சிறப்பு வருகையாளர்களின் உரை, பல்லூடகப் படைப்பு மற்றும் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பெற்றன.

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012-ஆம் ஆண்டிற்கான மூன்றாம் நிலை வெற்றியாளராக புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் நிலை வெற்றியாளராக பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியும் முதல் நிலை வெற்றியாளராக நிபோங் திபால் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின. நிகழ்வு சுமார் மாலை 4.00 மணியளவில் முடிவுற்றது.

Tuesday, 15 May 2012

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் 'பள்ளி மேலாளர் வாரியம்' அமைந்தது
கடந்த மே 13-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியக்குழு வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளிக்கு இன்றுவரையில் சொந்த நிலமில்லாத நிலையில் பள்ளியின் வளர்ச்சி தடைபடுவதால், சுற்றுவட்டார பொதுமக்கள், பள்ளியின் முன்னால் மாணவர்கள், அரசு சார்பற்ற இயக்கத்தின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து பள்ளி மேலாளர் வாரியத்தினை அமைத்திருக்கின்றனர். பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவராக திரு.எஸ்.சங்கர் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரோடு சேர்ந்து பணியாற்ற 10 வாரிய உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.மோகன் வாரியத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்சமயம் சுங்கை பக்காப் பட்டிணத்தில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்நிலத்தின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும் வாரியத்தின் துணைத்தலைவர் திரு.எஸ்.மோகன் குறிப்பிட்டார். தற்சமயம் சிறிய வகுப்பறைகளில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி பயின்றுவருவதாக பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சுமதி அவர்கள் வருத்தத்தோடு கூறினார். இப்பள்ளி மேலாளர் வாரியம் அமைவதன் வழி பள்ளிக்கும் மாணவர்களும் சிறந்த எதிர்காலம் அமையும் எனும் நம்பிக்கை வலுப்படுவதாக அவர் கூறினார்.