இந்நாட்டில் தமிழ்க் கல்வி போதனை தோன்றி 196 ஆண்டுகளாகி விட்டன. இந்த நீண்ட வரலாற்றில் தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளன. அந்த நீண்ட வரலாற்றின் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன என்று கூறி தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு 2012 நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைமைச் செயலாளர் எஸ். கணேஸ்வரன் வரவேற்றார்.
நேற்று (ஏப்ரல் 7 மலாயா பல்கலைக்கழக கொம்பிலக்ஸ் பிரதானா சிஷ்வாவில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இவர்களில் அதிகமான பெண்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களில் எவரும் எழுந்து நின்று கருத்துகள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய கணேஸ்வரன், தமிழ்ப்பள்ளிகள் என்றால் ஏழைத் தமிழர்களின் சரணாலயம் என்ற காலம் மாறி இப்போது நடுத்தர வகுப்பினர்களும் தங்களுடைய குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்ற காலம் தொடங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்ப்பள்ளிகள் தலைநிமிர்ந்து நடக்க தமிழ் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு தமிழ்ப்பள்ளியை தலையாய பள்ளியாக தேர்வு செய்யும் மனப்பாங்கைப் பெற வேண்டும் என்றார்.
நமது இலக்கு
தமிழ்ப்பள்ளிகள் குறித்து பல ஆண்டுகளாக நிறைய பேசப்பட்டுள்ளது. கட்டடம் இல்லை, திடல் இல்லை, மேசை இல்லை, நாற்காலி இல்லை, கரும்பலகை இல்லை, ஆசிரியர் இல்லை. இப்படி இல்லை, இல்லை என்று பல காலமாக பேசி வருகின்றோம். ஆனால், அத்தமிழ்ப்பள்ளிகளின் மையமான மாணவர்களிடம் எது இல்லை, எது இருக்க வேண்டும் என்று நாம் பேசுவதில்லை. நாம் இக்கட்டத்தைத் தாண்டி, மாணவர்களின் தரம் உயர வேண்டியதற்கு என்ன செய்யகிறோம், என்ன செய்ய வேண்டும் என்ற கட்டத்திற்கு வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அது குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்வதற்காகத்தான் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி தமது தலைமையுரையில் கூறினார்.
வழக்கமாக கூறப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் சூழ்நிலை தோன்றியுள்ளது. “தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகள் கவனத்தில் கொள்ளப்படும்” என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார். நாம் செய்ய வேண்டியது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வு அடைவதை உறுதிப்படுத்துவதாகும் என்று பசுபதி மேலும் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தரம் மேம்பாடடைய பல தரப்பினர் ஈடுபாடு காட்ட வேண்டும். “பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகிய அனைத்தும் இதற்குத் தேவையான பங்களிப்பைச் செய்ய வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற வேண்டும்: அதுதான் நமது இலக்கு”, என்பதை பசுபதி வலியுறுத்தினார்.
“நமது திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்”, என்றாரவர்.
மாணவர்களின் மேம்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு
“தமிழ் முன்னிலையடைந்த மொழி. நாம் அதற்கு என்ன செய்கிறோம்? தமிழ்ப்பள்ளிகள் என்ன செய்கின்றன? என்று தமது சிறப்புரையில் வினா எழுப்பிய இட்புள்யுஎப்பின் தலைவர் எ.யோகேஸ்வரன், அவர் தற்போது தலைமை ஏற்றிருக்கும் அந்த அமைப்பு கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்க் கல்வியின் வளர்ச்சி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாடு ஆகியவற்றுக்காக நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்களை விவரித்தார்.
அவரது அமைப்பு தமிழ் அறவாரியம் போன்ற அமைப்புகளுடன் கூட்டாக மேற்கொண்ட திட்டங்களையும் அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தரம் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று யோகேஸ்வரன் உறுதியளித்தார்.
தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்தாக வேண்டும்
காலை மணி 9.00 க்கு தொடங்கி மாலை மணி 5.00 வரையில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி கருத்தரங்கு 2012 இல் “80 விழுக்காட்டை நோக்கி தமிழ்ப்பள்ளிகள்” என்ற தலைப்பிலான அங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்த அங்கத்தில் பேராசிரியர் என்.எஸ். இரேஜேந்திரன், முத்துசாமி, டாக்டர் இராஜகோபால், விரிவுரையாளர் கு. நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சி.ம. திரவியம் வழிநடத்தினார்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை பெரிதும் பாராட்டிய இராஜகோபால், “அவர்கள் கடுமையாக, திறமையாக, வியப்பளிக்கும் வகையில் உழைக்கின்றனர்” என்றார்.
ஆனால், தமிழ்ப்பள்ளிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால், “தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்தாக வேண்டும்”, என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.
100 அல்ல. 523 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஒன்றுகூட வேண்டும், செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“நாட்டின் ‘பிரதமர் தமிழ்ப்பள்ளிகளின் தந்தை’ ஆக்கப்பட்டுள்ளார். பண மழை பொழியலாம், அதிகமாக கூரைகளும் பறக்கலாம். 55 ஆண்டுகால ஆட்சியில் கொள்கலன்களில் தமிழ்ப்பள்ளிகள்!”, என்று உணர்ச்சி பொங்க இராஜகோபால் கூறினார்.
உயர்மட்ட தமிழர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பவதில்லை. அவ்வாறே ஆசிரியர்களின் மனப்பாங்கும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு “புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பதில் கூற வேண்டும்” என்று கூறிய இராஜகோபால், எஸ்பிஎம் தேர்வுக்கான இரு பாடங்கள் நிலை பொதுத் தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகும் என்று வினவினார்.
தமிழ் மொழி போதனை குறித்த விவகாரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இடைநிலைப்பள்ளியில் தமிழ் மாணவர்களின் நிலை என்ன? அங்கு தமிழ் போதிக்கப்படுவது எப்படி இருக்கிறது? அங்கு தமிழ் போதிப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்று தம்மிடம் தெரிவித்த ஒரு தமிழ் ஆசிரியர் பற்றி கூறிய இராஜகோபால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் என்று வினவினார்.
பல காரணங்களுக்காக, தாழ்வு மனப்பான்மை உட்பட, இடைநிலைப்பள்ளியில் தமிழ் போதிக்க தயங்கும் தமிழாசிரியர்கள் இருக்கையில், இடைநிலைப்பள்ளியில் தமிழ் மேம்பாடு அடையுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“இது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மையாகும். இம்மாதிரியான ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளை சோகமான கட்டத்திற்கு இட்டுச் செல்வர்”, என்று அவர் மேலும் கூறினார்.
டாடி, வணக்கம் காலிங்
“அரசியல் தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களுக்கு இந்தியர்களின் நிலைப்பாட்டை வாக்குகள் வழி தெரிவிக்க வேண்டும்”, என்று இராஜகோபால் ஆலோசனை தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மேம்பாடு அடைவதற்கு சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்று என்.எஸ். இராஜேந்திரன் கூறினார். அவர்களின் வளர்ச்சி சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் காணப்பட வேண்டும். குடும்பத்திலிருந்து சமூகம் வரையில் தமிழ் மொழி மீது ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்திலிருந்து தமிழ் மொழி ஊட்டப்பட வேண்டும் என்ற அவர், தாம் தொலைபேசியில் ஓர் எண்ணை அழைத்து பதில் கிடைத்ததும் “வணக்கம்” என்று கூறியதாகவும் அதற்குப் பதிலாக அக்குழந்தை “Daddy, Vanakkam is calling you”, என்று கூறக்கேட்டதை நினைவு கூர்ந்தார். இந்த நிலை மாற வேண்டும் என்றாரவர்.
மேலும், மாணவர்களுக்கு சமயக் கல்வி போதிக்க வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதற்காக இந்து மாமன்றம் எடுத்துக்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் இராஜேந்திரன் விளக்கிக் கூறினார்.
சமமான நிதி ஒதுக்கீடு வேண்டும்
பள்ளியில் மாணவன்தான் மையமாக இருக்க வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் மாணவனின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற அனைத்தும் அதற்குப் பின்னரே என்று விரிவுரையாளர் கு. நாராயணசாமி கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவனின் மேம்பாட்டை உறுதி செய்வதற்கு அடிப்படை தரமான கல்வி என்றால், அதன் அடித்தளம் மாணவனை சிந்திக்க வைக்கும் கல்வியாகும் என்று நாராயணசாமி கூறினார்.
“மாணவன் சிந்திக்க வேண்டும். சிந்திப்பதற்கென்றே கல்வி போதிக்கப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெண்களுக்கு பெரும் பங்குண்டு என்று கூறிய நாராயணசாமி, குடும்பத்திலிருந்து பள்ளிவரையில் மாணவர்களின் கல்வி தரம் வளமடைய பெண்கள் தங்களுடைய பங்கை ஆற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் கல்வி தரம் உயர்வதற்கு பலரும் பங்காற்றலாம். அதே வேளையில் தரம் உயர்வதற்கு நிதி வளம் இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு சமமானதாக இருக்க வேண்டும்.
சமமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய நாராயணசாமி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு அளிக்கும் கட்சியைத்தான் ஆதரிப்போம் என்று மக்கள் கூற வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்து, மேன்மையை நோக்கி தமிழ்ப்பள்ளி மறு உருவாக்கம் என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்றம் மலேசிய தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் வே.இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சி.பசுபதி, டாக்டர் ஐயங்கரன் மற்றும் கா. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.
80 விழுக்காட்டினர் தேர்வு பெற வேண்டும்
தேர்வில் எத்தனை “எ” பெற்றனர் என்பது கேள்வி அல்ல. எத்தனை மாணவர்கள் தேர்வு ஆயினர்? அதுதான் கேள்வி என்று பசுபதி அழுத்தந்திருத்தமாக கூறினார்.
“தமிழ் என் தாய் மொழி. ஆகவே, நான் தமிழ்ப்பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது அல்ல நமது அடிப்படை நிலைப்பாடு. தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலை, தரம் உயர்வாக இருக்கிறது. ஆகவே, தமிழ்ப்பள்ளிக்குச் செல்கிறேன். இதுதான் நமது நோக்கம்.
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தது 80 விழுக்காட்டினர் அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இதுதான் நமது இலக்கு!”, என்றாரவர்.
டியூசன் என்ற புற்றுநோய்
பெற்றோர்களின் பின்னணி, அவர்களின் வறுமை, கொடுமை குறித்து தாம் ஏதும் செய்ய முடியாது. ஆனால், அம்மாதிரியான சூழ்நிலையிலிருந்து வந்த மாணவர்களை தம்மால் மேம்பாடடையச் செய்ய முடியும் என்ற தென்கொரிய அமெரிக்கரின் சிந்தனையை மேற்கோள் காட்டிய பசுபதி, அதேதான் நமது நிலையும் என்றார்.
பன்மொழியாளர் மற்றும் ஒரே மொழியாளர் ஆகிய இருவருக்கும் இடையிலான சிந்தனை வளத்தின் தரத்தையும் அதில் பண்டையக்கால தமிழ் மக்களின் மரபணுத் தொடர்பையும் ஒப்பிட்டு டாக்டர் ஐயங்கரன் விளக்கம் அளித்தார்.
நோபெல் பரிசு பெறுபவர்கள் பன்மொழி அறிவாற்றல் திறமையுடையவர்கள் என்று கூறிய ஐயங்கரன், மலேசிய மாணவர்கள் மூன்று மொழிகளில், ஏன் நான்கு மொழிகளில் கூட, முதன்மை பெற முடியும் என்றார்.
ஆனால், இந்நாட்டைப் பீடித்திருக்கும் தனிமுறைப்பயிற்சி (private tution) ஆதிக்கத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். “தனிமுறைப்பயிற்சி நமது சமுதாயத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய்”, என்றாரவர்.
“நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அந்த தனிமுறைப்பயிற்சி கலாச்சாரத்திலிருந்து விடுபட்டுள்ளனர். அது நிலைநிறுத்தப்பட வேண்டும்”, என்று ஐயங்கரன் கேட்டுக்கொண்டார்.
“Ignite your mind”- that is the Mission of our Schools என்றார் ஐயங்கரன்.
பிடலை பார்!
மாணவர்களே மையம். அதுதான் அக்னி குஞ்சு (தீப்பொறி) என்று சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களை மையமாக வைத்து மாணவர்களின் அடைவு நிலையையும் தரத்தையும் ஒரு குறிப்பிட்ட திட்டக் காலத்திற்குள் உயர்த்த முடியும் என்று அவர் ஆதரங்களைக் காட்டி வாதிட்டார்.
“கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவை பார்! பத்தே ஆண்டில் அவர் மாணவர்களின் தரத்தை உயர்த்திக் காட்டினார்.”
நமது மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கான நமது திட்டம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் கொண்டுள்ளது. புற்றுநோய் இருக்குமானால் துண்டித்து எறிவோம். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி தேவைப்படும் என்றாரவர்.
“நம்மிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றன. நாம் அதனைச் செய்ய முன்வந்துள்ளோம். நம்மால் அதனைச் செய்ய முடியும். செய்வோம்”, என்று ஆறுமுகம் சூளுரைத்தார்.
இத்திட்டத்தில் எதிர்பாராத இடர்கள் ஏதேனும் தோன்றுமானால், அதற்கான மாற்று வியூகமும் இருக்கிறது என்றாரவர்.
நமது திட்டம் ஐந்தாண்டு இலக்கை கொண்டுள்ளது. சற்று கூடுதல் காலம் தேவைப்படலாம். இன்னும் அறுபது நாள்களில் இத்திட்டத்தை ஒரு குழு இயங்கச் செய்யும் என்று ஆறுமுகம் மேலும் கூறினார்.
தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு 2012 இல் மூன்று பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் பள்ளி மேலாளர் வாரியங்களும் தங்களுடைய பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த படைப்புகளை வழங்கினர். அப்பள்ளிகள்:
SJK(T) மிட்லேண்ட்ஸ், ஷா அலாம்
SJK(T) புக்கிட் ஜாலில், கோலாலம்பூர்
SJK(T) சிம்பாங் லீமா, கிள்ளான்
மேற்கொண்டு, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.